நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும்
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஏற்கனவே கூட்டணியில் இருந்தனர். தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. பிரிந்துள்ளது. ஜெயலலிதா குறித்து பேசும்போது அமைதியாக இருந்தவர்கள் இப்போது டெல்லி சென்று கூட்டணி குறித்து பேசுவதற்காக யாரையோ சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர்களும் சென்று திரும்பினர். அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமா? அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் கூட இருக்கலாம். ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சிதான் உண்மையான அ.தி.மு.க. தற்போது உள்ள கட்சி களவாடப்பட்ட அ.தி.மு.க.
கடும் அதிருப்தி
மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு கடும் அதிருப்தி உள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. உள்ளே வந்துவிடும் என்று மக்களிடம் கூறி கூட்டணி பலத்தால் வென்றனர். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு என்ன கிடைத்து விடும்? தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்..
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கோபப்பட்டதனால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. எனவே 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கும். தி.மு.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டி அ.ம.மு.க.வை உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள்.
யாருடன் கூட்டணி
நானும் டெல்டாவை சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில், அவர்கள் கூட்டணி ஆட்சியான கர்நாடக காங்கிரசிடம் இருந்து நியாயத்தை பெற்றுத்தர முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். வருங்காலத்தில் நமது உரிமையை போராடி தான் பெற முடியும். எனவே தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது டிசம்பர் ஜனவரி மாதத்தில் முழுநிலைமைக்கு வந்து விடும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். அதற்கு வாய்ப்பில்லாமல் போனால் தனித்து போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்
பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.