8 மணி நேர தொடர் நடன கலை நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் 8 மணி நேரம் தொடர் நடன கலை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைக்கப்பட்டது.
தொடர் நடன நிகழ்ச்சி
சர்வதேச அளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், புதுக்கோட்டையிலும் செஸ் போட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் புதுமையாக சிந்தித்து உலக சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து 8 மணி நேரம் நடன மாரத்தான் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, இசைப்பள்ளி மாணவ-மாணவிகள், திருநங்கைகள், நடன கலைஞர்கள் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன்படி தொடர் நடன மாரத்தான் கலை நிகழ்ச்சி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார்.
கரகம், பரதநாட்டியம்
இந்த கலை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு பதாகைளை கையில் ஏந்தியபடியும் நடனமாடினர். நாட்டுப்புற பாடல், சினிமா பாடல்களுக்கும் நடனமாடினர். மேலும் பரதநாட்டியம், கரகம் வைத்து நாட்டுப்புற பாடல்களுக்கும் ஆடி மாணவ-மாணவிகள் அசத்தினர். இடைவிடாமல் தொடர்ந்து 8 மணி நேரம் (இரவு 7 மணி வரை) இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியை காண மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில் கலையரங்கத்தில் இருந்த மாணவ-மாணவிகளும் உற்சாகத்தோடு நடனமாடி மகிழ்ந்தனர். சதுரங்கா ஒளிரும் முகங்கள் என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் செஸ் போட்டியை நினைவூட்டும் வகையிலான அலங்கார ஆடைகளுடன் வேடம் அணிந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வர்ஷா என்ற திருநங்கை ஆணி பலகை மீது ஏறி நின்று தலையில் கரகம் வைத்து நடனமாடினார்.
உலக சாதனை
இதுபோன்ற கலை நிகழ்ச்சி எங்கும் நடைபெறாத நிலையில் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் புத்தகத்தில் உலக சாதனையாக இடம்பெற்றது. இந்த சாதனையில் 1,088 மாணவ-மாணவிகள் பங்கேற்று செஸ் தொடர்பாக 2003 தகவல்கள் குறித்து நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான சான்றிதழை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பொறுப்பாளர் விவேக் வழங்கினார். அப்போது கலெக்டர் கவிதாராமு உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், '' அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ. அனுமதி கேட்டதன் பேரில் முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து மாணவர் சேர்க்கை தொடங்குவது முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார்.