வனப்பகுதியில் இருந்து 85 அடி நீள கொடி மரம் கொண்டு வரப்பட்டது


தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வனப்பகுதியில் இருந்து 85 அடி நீள கொடி மரம் கொண்டு வரப்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வனப்பகுதியில் இருந்து 85 அடி நீள கொடி மரம் கொண்டு வரப்பட்டது.

குண்டம் திருவிழா

கோவை மாவட்டம் ஆனைமலையில் புகழ் பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா, நாளை(சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம்(பிப்ரவரி) 3-ந் தேதி நள்ளிரவில் மயான பூஜை, 4-ந் தேதி சக்தி கும்பஸ்தானம், 6-ந் தேதி குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கொடி மரம்

இதையொட்டி கொடியேற்றத்துக்காக வனப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை முறைதாரர் மனோகர், கொடிக்கம்பம் முறைதாரர் கிருஷ்ணன், மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர், பக்தர்கள் ஏராளமானோர் வனப்பகுதிக்கு சென்று 85 அடி நீள மூங்கில் மரத்தை வெட்டி கொண்டு வந்தனர். முன்னதாக சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் மரத்தை பூக்களால் அலங்கரித்து சிம்ம கொடி மற்றும் கங்கணம் கட்டி நவ தானியம் வைத்து மஞ்சள் துணியால் சுற்றி பக்தர்கள் தோளில் சுமந்து மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். நாளை ஆழியாறு ஆற்றுப்படுகையில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றம் நடக்கிறது.


Next Story