நெல் மூட்டைக்கு ரூ.45 கூடுதலாக வசூல்
ஆனைமலை கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.45 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை
ஆனைமலை கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.45 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல் கொள்முதல்
ஆனைமலை ஒன்றியத்தில் 5,400 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு ஆண்டுக்கு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 2 போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறையினரால் கோ-51ஏ, எல்.எஸ்.டி. உள்ளிட்ட நெல் ரகங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விவசாயிகளின் வசதிக்காக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது. இங்கு சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,160 மற்றும் பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,115-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். இதற்காக நெல்லை உலர்த்த அங்குள்ள களங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதுவரை சன்ன ரகம் 955 மெட்ரிக் டன், பொது ரகம் 960 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்
இந்த நிலையில் நெல் கொள்முதல் மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆனைமலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெல்லை உலர்த்தவே மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கிடையில் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை பிடிப்பதற்கு(40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு) ரூ.45 கூடுதலாக வாங்குகின்றனர். சராசரியாக தினமும் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ.45 வசூலித்தால், 800 மூட்டைக்கு ரூ.36 ஆயிரம் ஆகிவிடுகிறது. மேலும் ஓட்டைக்கு ஒரு கிலோ முதல் 1½ கிலோ வரை அதிகமாக எடுக்கப்படுகிறது. ஆனால் ரசீதில் 40 கிலோ எடை மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வெளிச்சந்தையில் இடைத்தரகர்கள் விவசாயிகளை ஏமாற்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை தடுக்க தமிழக அரசு நேரடி கொள்முதல் மையம் தொடங்கினால், இங்கேயும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வேதனையாக உள்ளது. இதற்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.