சிங்கப்பூர் விமானத்தில் செல்ல வந்த கல்லூரி மாணவர் கைப்பையில் ஏ.கே.47 துப்பாக்கி தோட்டா சிக்கியது


சிங்கப்பூர் விமானத்தில் செல்ல வந்த கல்லூரி மாணவர் கைப்பையில் ஏ.கே.47 துப்பாக்கி தோட்டா சிக்கியது
x

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைப்பையில் ஏ.கே.47 துப்பாக்கி தோட்டா சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற தமிழகத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது குடும்பத்தினருடன் செல்ல வந்தார். அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அமெரிக்காவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படிக்கும் அவருடைய மகன் கவுரஷ் (20) என்பவரது கைப்பையை சோதனை செய்தபோது அதில் ஏ.கே.47 துப்பாக்கியில் பயன்படுத்தும் 7 மி.மீ. அளவு கொண்ட துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே கல்லூரி மாணவரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அப்போது தவறுதலாக துப்பாக்கி தோட்டா கைப்பையில் வந்து இருக்கலாம் என கூறினார்.

இது குறித்து கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story