14 கிலோ மீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற ஆந்திர மாணவி
உலக நன்மைக்காக 14 கிலோ மீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி ஆந்திர மாணவி கிரிவலம் சென்றார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மேலும் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதுமட்மின்றி சமீப நாட்களாக தினந்தோறும் பகல், இரவு நேரங்களில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற மாணவி உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியபடி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்தார்.
முன்னதாக அவர் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு வழிபாடு செய்து விட்டு தனது கிரிவலத்தை தொடர்ந்தார். காலையில் லேசான சாரல் மழை பெய்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் அவர் ஆடியபடி கிரிவலம் சென்றதை பொதுமக்கள் மற்றும் கிரிவலம் சென்ற பக்தர்கள் கண்டு ரசித்து பாராட்டினர்.
பின்னர் அவர் கோவில் முன்பு தனது கிரிவலத்தை நிறைவு செய்தார்.