மின்தடை ஏற்படுத்தியதை கண்டித்து மறியல் செய்ய முயற்சி
குடிநீர் திட்ட பணிகளுக்காக மின்தடை ஏற்படுத்தியதை கண்டித்து மறியல் செய்ய முயற்சி நடந்துள்ளது.
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 50 அடிக்கு மேல் குழி தோண்டியுள்ளனர். இதனால் தவுட்டுப்பாளையம் பகுதிகளில் கிணறுகளில் தண்ணீர் வற்றி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இந்த திட்ட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் காவிரி ஆற்றில் உள்ள குடிநீர் திட்ட பணிக்காக ராட்ச மின்மோட்டாருக்கு மின் சப்ளை பற்றாக்குறையாக இருப்பதால் நேற்று காலை நன்செய் புகழூர், தவுட்டுப்பாளையத்திற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மின்மோட்டாருக்கு புதிதாக மின் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் காலை முதல் மாலை இந்த பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் சுமதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காவிரி ஆற்றுக்கு சென்று திட்ட பணிகள் நடைபெறும் இடத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.