நெகிழியை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்ப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின் அடுத்த கட்ட விழிப்புணர்வு நடவடிக்கையாக ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்ப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். முன்னதாக மாணவ-மாணவியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்ட உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கு பெற்ற மாபெரும் மனித உருவாக்கம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் மகளிர் சுயஉதவி குழுவினர் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளில் திறம்பட பங்கேற்ற பங்கேற்பாளர்களை கலெக்டர் பாராட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண், கூடுதல் கலெக்டர் செ.ஆ.ரிஷப் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.