கூடுவாஞ்சேரி அருகே கார் மோதி சாலையின் குறுக்கே விழுந்த மின்கம்பம்


கூடுவாஞ்சேரி அருகே கார் மோதி சாலையின் குறுக்கே விழுந்த மின்கம்பம்
x

கூடுவாஞ்சேரி அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு

மின்கம்பம் உடைந்தது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு நோக்கி நேற்று காலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரை திவாகர் ஓட்டிச்சென்றார். கார் நந்திவரம் புற்றுக்கோவில் பெட்ரோல் நிலையம் அருகே செல்லும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக பொதுமக்கள் யாரும் வாகனத்தில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

2 பேர் படுகாயம்

இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து சென்று அந்த வழியாக சாலையில் செல்லும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி உடனடியாக கூடுவாஞ்சேரி மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பத்தை நட்டு மின்சார வயர்களை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படட்டது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story