எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தந்தை- மகள்கள் உயிர் தப்பினர்.
ஓசூர்:-
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தந்தை- மகள்கள் உயிர் தப்பினர்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓசூர் விநாயகர் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் பயன்படுத்தி வருகிறார். இவரது ஸ்கூட்டரை, அவருடைய நண்பர் சதாசிவம் நேற்று எடுத்து சென்றார்.
அப்போது அவருடைய குழந்தைகளை பள்ளியில் விட்டு வருவதற்காக 2 பிள்ளைகளுடன் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார். திடீரென ஸ்கூட்டரின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
தீப்பிடித்து எரிந்தது
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சதாசிவம், ஸ்கூட்டரை உடனே நிறுத்தினார். குழந்தைகளை ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்க செய்தார். கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சதாசிவம் மற்றும் அவருடைய 2 குழந்தைகள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே ஓசூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நடந்துள்ளது. இது 2-வது சம்பவம் ஆகும். இதன்மூலம் எலக்ட்ரிக்் ஸ்கூட்டர் பயன்படுத்துவோர் அச்சம் அடைந்துள்ளனர்.