கரூரில் இருந்து தேனிக்கு அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஊழியர்
தேனியில் அரசு பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில், அவரை வெட்டுவதற்காக கரூரில் இருந்து தேனிக்கு அரிவாளுடன் இளநிலை உதவியாளர் மோட்டார் சைக்கிளில் வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக போடியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி (வயது 53) பணியாற்றி வருகிறார்.
இதே அலுவலகத்தில் போடியை சேர்ந்த உமாசங்கர் (40) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இளநிலை உதவியாளராக பணியாற்றினார். பின்னர், அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக இளநிலை உதவியாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், ராஜராஜேஸ்வரி பணியில் இருந்தபோது உமாசங்கர் அங்கு வந்தார்.
தனது பணியிட மாற்றத்துக்கு ராஜராஜேஸ்வரி தான் காரணம் என்று கருதி அவரிடம் தகராறு செய்து, தான் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில்...
அரிவாளால் வெட்டியபோது தடுக்க முயன்ற அதே அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் முத்துப்பாண்டி (31) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரை கைது செய்தனர்.
உமாசங்கரை தேனி மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர். கைதான உமாசங்கர் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியில் வசித்தபடி தினமும் வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று வந்தார்.
உமாசங்கர் கரூரில் உள்ள ஒரு கடையில் அரிவாளை புதிதாக வாங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தேனிக்கு தனது மோட்டார் சைக்கிளிலேயே வந்தார். சுமார் 151 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் வந்த அவர், சம்பவம் நடந்த பெருந்திட்ட வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று ராஜராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவருடைய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.