ஆதார் எண்ணை திருடி ரூ.80 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர்
ஆதார் எண்களை திருடி ரூ.80 லட்சம் மோசடி செய்த தனியார் கடன் நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
ஆதார் எண்களை திருடி ரூ.80 லட்சம் மோசடி செய்த தனியார் கடன் நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
நாகர்கோவில் மற்றும் அழகியபாண்டியபுரம் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார் கடன் நிறுவனத்தில் கடன் பெற்று பொருட்கள் வாங்கியதாக எங்களது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்திகள் வந்தன. நாங்கள் பொருட்கள் எதுவும் வாங்காமலேயே பணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக விசாரித்தோம்.
அப்போதுதான் அழகியபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் கடன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாலிபர் ஒருவர் எங்களிடம் இருந்து பெற்ற ஆதார் கார்டின் நகலைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த வாலிபரிடம் சென்று விசாரிக்க சென்றோம். அப்போது அவர் வீட்டில் இல்லை. அவர் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.
ரூ.80 லட்சம் வரை மோசடி
எங்களைப்போல் இன்னும் பலரிடம் அவர் மோசடி செய்துள்ளார். சம்பந்தப்பட்ட வாலிபர் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.