ரூ.17 லட்சத்துடன் சென்ற ஊழியர் காட்டு பன்றி மீது மோதி விபத்து
ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்புவதற்காக ரூ.17 லட்சத்துடன் சென்ற ஊழியர் காட்டு பன்றி மீது மோதி விபத்தில் சிக்கினார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா காலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று மதியம் 12.20 மணியளவில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள ஏ.டிஎம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக ரூ.17 லட்சத்து 40 ஆயிரத்துடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அணைக்கட்டு அடுத்த கவுதமபுரம் அருகே சென்றபோது திடீரென 5 காட்டு பன்றிகள் சாலையின் குறுக்கே வந்துள்ளது. இந்த பன்றிகள்மீது மோதி கீழேவிழுந்து பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செல்வி மற்றும் ஓட்டுனர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சுரேசை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சுரேஷின் உறவினர்கள் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அணைக்கட்டு போலீசார் முன்னிலையில் சுரேஷ் பையில் இருந்த ரூ.17 லட்சத்து 40 ஆயிரத்தை சுரேஷ் பணியாற்றும் நிறுவன மேலாளர் ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.