விருத்தாசலத்தில் வந்தேபாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு


விருத்தாசலத்தில்      வந்தேபாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
x

விருத்தாசலத்தில் வந்தேபாரத் ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

வந்தேபாரத் ரெயில்

திருநெல்வேலி-சென்னை இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது, அதே நேரத்தில் நேற்று தொடக்க விழா நடந்ததையொட்டி, இந்த ரெயிலை அனைவரும் பார்க்கும் வகையில் இன்று(அதாவது நேற்று) ஒருநாள் மட்டும் விருத்தாசலம் ரெயில் நிலையம் உள்பட மேலும் சில ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த வந்தேபாரத் ரெயில், விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு இரவு 7.10 மணிக்கு வந்து சேர்ந்தது.

வரவேற்பு

அப்போது அங்கிருந்த ரெயில்நிலைய பணியாளர்கள் மற்றும் பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி திருச்சி கோட்ட பொறியாளர் ராமலிங்கம், நிலைய மேலாளர் சுனில் குமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் நகர தலைவர் பாலமுருகன், மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர்கள் வெங்கடேசன், பரமசிவம், ஆறுமுகம், ஜெயராமன், மேகநாதன், பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

கோரிக்கை மனு

மேலும் அந்த ரெயிலில் பயணித்த பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கும் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தார்கள். அப்போது அவரிடம், விருத்தாசலத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், விருத்தாசலம் அனைத்து வர்த்தகர்கள் நல சங்கத்தின் தலைவர் கோபு மற்றும் நிர்வாகிகளும் தனித்தனியாக மனு அளித்தனர்.

இதனிடையே அங்கு இருந்த பொதுமக்கள் ரெயிலை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்தனர். மேலும், இளைஞர்கள், இளம் பெண்கள் ரெயில் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து 7.18 மணிக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது, விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இந்த ரெயிலில் விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் வரை பயணம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்தது. முன்னதாக வந்தே பாரத் ரெயில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


Next Story