திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்


திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்
x

எந்த ரெயிலிலும் இடம் கிடைப்பதில்லை என்பதால், திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

திண்டுக்கல்

ரெயில் சேவை ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்லுக்கு தேவையான ரெயில் சேவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிபிரியா தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன், கவுரவ தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி, செயலாளர் மேடா பாலன், தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன், திண்டுக்கல், பழனியை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அந்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

ரெயில்களில் இடம் இல்லை

* திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டும். மழைக்காலத்தில் பயணிகள் நனைவதால் 4, 5-வது நடைமேடைகளில் முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும்.

* திண்டுக்கல்-சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-கன்னியாகுமரி இடையே திண்டுக்கல்லில் நின்று செல்லும் வகையில் வந்தேபாரத் ரெயில், திண்டுக்கல்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய புதிய ரெயில்களை இயக்க வேண்டும்.

* திண்டுக்கல்லில் அனைத்து ரெயில்களும் 5 நிமிடம் நின்று செல்ல வேண்டும். ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகள் பொருத்த வேண்டும். சுரங்கப்பாதையை 5-வது நடைமேடை வரை நீட்டிக்க வேண்டும். சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

* தினசரி நாளிதழ்கள், புத்தகங்கள், சிறுமலை வாழைப்பழம் விற்பதற்கு கடைகள் திறக்க வேண்டும். பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்கள் தொல்லையை தடுக்க வேண்டும். வங்கி ஏ.டி.எம். மையங்களை திறக்க வேண்டும்.

* திண்டுக்கல்லுக்கு வரும் அனைத்து ரெயில்களும் கூட்டம் நிரம்பியே வருவதால் பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் திண்டுக்கல்லில் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டியை இணைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களையும் கொடுத்தனர்.

பேட்டரி கார்கள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசுகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் முதியவர்கள், நோயாளிகள் நடக்க சிரமப்படுவதால் நகரும் படிக்கட்டுகள், 4 பேட்டரி கார்கள் இயக்க வேண்டும். பேட்டரி கார்களுக்கு நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும். பாண்டியன், தேஜஸ்வி ரெயில்களை முதல் நடைமேடையில் நிறுத்த வேண்டும். இரவில் நடைமேடைகளில் விளக்குகளை எரியவிட வேண்டும். இதுதவிர பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பழனி-சென்னை ரெயில்

வேலுச்சாமி எம்.பி. பேசுகையில், திண்டுக்கல்-சபரிமலை ரெயில் திட்டம், திண்டுக்கல்-காரைக்குடி ரெயில் திட்டம், பழனியில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை, ரெயில்வே மேம்பாலங்கள் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிஇருக்கிறேன். எனினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பழனியில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு ரெயில் சேவையை கொண்டு வந்தே தீருவேன். கொடைரோட்டில் 9 முக்கிய ரெயில்கள் நிற்காமல் செல்கின்றன. அதில் 3 ரெயில்கள் நின்று செல்வதற்கு ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்றார்.

அதிகாரி பதில்

மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிபிரியா பேசுகையில், புதிய ரெயில்களை இயக்கும் முடிவை ரெயில்வே வாரியம் தான் எடுக்கும். எனவே அதுதொடர்பான வணிகர்களின் கோரிக்கைகளை அனுப்பி வைப்போம். இதுதவிர குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் திண்டுக்கல்லில் பெட்டிகளை இணைப்பது சாத்தியம் இல்லை. பேட்டரி கார்களை பொறுத்தவரை பொதுமக்களின் பங்களிப்போடு இயக்கப்பட உள்ளது. இதற்கு தனியார் முன்வந்தால் விரைவில் பேட்டரி கார்களை இயக்கலாம் என்றார்.

பழனியாண்டவர் ரெயில் மீண்டும் வருமா?

பழனியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பழனியாண்டவர் எக்ஸ்பிரஸ் ரெயில், பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு விட்டது. இதனால் பழனி மக்கள் மற்றும் பக்தர்களுக்கு அந்த ரெயிலில் இருக்கை கிடைப்பதில்லை. பழனியில் இருந்து சென்னைக்கு பழனியாண்டவர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திண்டுக்கல்-சபரிமலை ரெயில் திட்டம்

கூட்டத்தில் ஒரு வணிகர் பேசுகையில், திண்டுக்கல்-சபரிமலை ரெயில் திட்டத்தை நிறைவேற்றும்படி பலஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. திண்டுக்கல், தேனி ஆகிய 2 மாவட்டங்களிலும் தொழில், சுற்றுலா வளர்ச்சி பெற திண்டுக்கல்-சபரிமலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

ஒலிபெருக்கி அறிவிப்பு

வேலுச்சாமி எம்.பி. பேசுகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில் வருகை மற்றும் குளிர்சாதன பெட்டி, முன்பதிவு பெட்டிகளின் வரிசையை ஒலிபெருக்கியில் முறையாக அறிவிப்பது இல்லை. நானே ஒருமுறை ரெயிலில் முன்வரிசையில் குளிர்சாதன பெட்டி வரும் என நினைத்து காத்திருந்தேன். ஆனால் பின்வரிசையில் குளிர்சாதன பெட்டிகள் வந்ததால் மற்றொரு பெட்டியில் ஏறி, மற்றொரு நிலையத்தில் மாறினேன். பல பயணிகள் பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடினர். முதியவர்கள், பெண்கள் சிரமப்பட்டனர். எனவே ரெயில் வருகை, பெட்டிகளின் வரிசையை தமிழ், ஆங்கிலத்தில் சரியாக அறிவிக்க வேண்டும், என்றார்.

டிஜிட்டல் பலகை பயணிகள் சேவை இல்லையா?

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகள் இல்லை. இதுகுறித்து வணிகர்கள் கூறியபோது, டிஜிட்டல் பலகை வைப்பதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை என்று கூறினர். இதனால் ஆவேசமடைந்த ஒரு வணிகர், ரெயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிவிப்பது பயணிகளுக்கான சேவை தானே? அதற்கு எதற்கு தனியாரை எதிர்பார்க்க வேண்டும். ரெயில்வே நிர்வாகமே மேற்கொள்ள வேண்டியது தானே? என்றார்.

இந்தி பேசும் ஊழியர்கள்

டிக்கெட் முன்பதிவு மையத்தில் இந்தி பேசும் ஊழியர்கள் பணியில் இருப்பதால் பாமர மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தமிழ் பேசும் ஊழியர்களை நிமிக்க வேண்டும் என்று ஒரு வணிகர் கூறினார். உடனே ரெயில்வே பணிகளுக்கு பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். அதேபோல் தமிழர்கள் அதிக அளவில் வந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story