தா.பழூரில் டெங்கு காய்ச்சலுக்கு முதியவர் பலி?


தா.பழூரில் டெங்கு காய்ச்சலுக்கு முதியவர் பலி?
x

தா.பழூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பலியானார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அரியலூர்

டெங்கு காய்ச்சல்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து கொண்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தா.பழூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 60) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்றவரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் வாசலில் காய்ச்சலோடு படுத்து இருந்தார்.

நேற்று அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் பலி

இதனைதொடர்ந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அவருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே நேற்று மாலை சங்கர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே இது போன்ற திடீர் மரணங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு செல்லும் போது பரிசோதனை செய்து அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வீட்டை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே கொசு ஒழிப்பு பணியில் களப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். எனவே புகை தெளிப்பான் மூலம் வீடு தோறும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story