'பஸ்சை பச்சபாளையத்துக்கு விடு' - அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு


பஸ்சை பச்சபாளையத்துக்கு விடு - அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு
x

கோவையில் தனது ஊருக்கு செல்லும் பஸ் என்று நினைத்து வேறு பஸ்சில் ஏறி தகராறு செய்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை:

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உக்கடம், மதுக்கரை வழியாக பாலத்துறை செல்லும் 50-ம் நம்பர் டவுன் பஸ் நின்று கொண்டு இருந்தது.

இந்த பஸ்சில் 75 வயதான மூதாட்டி ஒருவர் ஏறி அமர்ந்துள்ளார். உடனே பஸ்சில் இருந்த நடத்துனர் வினோத், அந்த மூதாட்டியிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் பச்சாபாளையம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

உடனே அவர் இந்த பஸ் பணிமனைக்கு செல்கிறது, நீங்கள் வேறு பஸ்சில் ஏறி செல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த மூதாட்டி நான் கீழே இறங்க மாட்டேன், பஸ்சை மேற்கு நோக்கி பச்சாபாளையத்துக்கு விடு என்று கூறினார்.

அதற்கு கண்டக்டர், பச்சாபாளையத்துக்கு செல்லாது பணிமனைக்குதான் செல்கிறது, நீங்கள் பஸ் மாறி ஏறிவிட்டீர்கள், கீழே இறங்கி வேறு பஸ்சில் ஏறி செல்லுங்கள் என்று கூறினார்.

ஆனால் அந்த மூதாட்டி, இந்த பஸ் பச்சாபாளையத்துக்கு செல்லாது என்று எழுதி கொடு... நான் கீழே இறங்கி செல்கிறேன் என்று கூறினார். உடனே அங்கு வந்த டிரைவரும் அந்த மூதாட்டியை இறங்க சொல்ல, அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டே நான் இறங்க மாட்டேன் என்றுக்கூறி தகராறு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் டிரைவரும், கண்டக்டரும் அந்த மூதாட்டியிடம் பக்குவமாக பேசி பஸ்சில் இருந்து இறக்கிவிட்டனர். இதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Related Tags :
Next Story