தமிழகத்தில் ஈர நிலங்களை பாதுகாக்க சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


தமிழகத்தில் ஈர நிலங்களை பாதுகாக்க சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

தமிழகத்தில் ஈர நிலங்களை பாதுகாக்க சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈர நிலங்கள் எனப்படுபவை உலகிற்கு இயற்கை அளித்தக் கொடையாகும். அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் 1971-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஐ.நா. அமைப்பின் ஏற்பாட்டில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு தான் ராம்சர் உடன்பாடு ஆகும்.

இந்த ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது என்பதாலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை மேம்பட்டு விடாது. அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம் தான் அவற்றின் மேம்பாட்டை சாத்தியமாக்க முடியும். எனவே, ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் ஈர நிலங்கள் இயக்கம் என்று ஏற்கனவே உள்ள அமைப்பை கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஆணையமாக மாற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளை வகுத்து, இனியும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story