செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
x

செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

சிவன் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புத்தமங்கலத்தில் நாயக்கர் காலத்தை சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சந்திரசேகர் மற்றும் மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்த கோவிலில் பழமை வாய்ந்த கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

புத்தமங்கலத்தில் ஊருக்கு வெளியே நாயக்கர் காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்த சிவன் கோவில் காணப்படுகிறது.

கல்வெட்டுகள்

இதை இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கோவிலில் முன் மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு கல்வெட்டும். அதே கல்லின் அடிப்பகுதியில் மற்றொரு கல்வெட்டும் காணப்படுகிறது. தமிழ் எழுத்துக்கள் தெளிவாக காணப்படுவதால் இது பிற்கால நாயக்கர் காலத்தை சேர்ந்தது என்று கூறலாம். கல்வெட்டானது தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் கலந்து எழுதப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டானது 4 வரிகளை கொண்டதாக உள்ளது. முதல் வரியில் கொமரப்ப நாயக்கர் ராஜா என்றும், 2-வது வரியில் காவல் சின்னத்தம்பி நாயக்கர் இந்த கோவிலுக்கு ஊர்களை அளித்ததையும், இந்த கோவிலுக்கு தீங்கு செய்பவர்கள் காராம் பசுவை கொன்றவர்கள் அடையக்கூடிய தண்டனை அடைவார்கள் போன்ற செய்திகளும் காணப்படுகிறது.

படிக்க இயலவில்லை

தெலுங்கில் உள்ள வார்த்தைகளை படிக்க முடியவில்லை. ஆகவே கல்வெட்டின் முழு பொருளை தெரிந்து கொள்ள இயலவில்லை. கல்வெட்டின் மேல் சிம்மம் வரி வடிவமாக வரையப்பட்டுள்ளது. இதே கல்வெட்டு அமைந்துள்ள தூணின் அடிப்பகுதியில் மற்றொரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் வேலாயுதம் என்ற வார்த்தையுடன் தொடங்கி 7 வரிகள் காணப்படுகிறது. இதுவும் தமிழ், தெலுங்கு கலந்து எழுதப்பட்டுள்ளது. இதில் மரண தண்டனை வழங்கப்படும் என்று கடைசி வரி குறிப்பிடுகிறது. சற்று சிதைந்தும், தெலுங்கும் கலந்துள்ளதால் இதை முழுமையாக படிக்க இயலவில்லை. இதன் அருகில் 2 சிறிய கோவில்கள் காணப்படுகின்றன.

கோரிக்கை

ஒன்றில் முருகனும், மற்றொன்றில் விநாயகரையும் வைத்து வழிபட்டதாக இந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கோவிலில் உள்ள சிவபெருமானும் அச்சரப்பாக்கத்தில் உள்ள சிவபெருமானும் திருவிழா காலங்களில் ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய இலுப்பை தோப்பு என்ற இடத்தில் சந்திப்பதாக இங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.

இந்த கோவிலை புனரமைத்து பழமை மாறாமல் கட்டுவதற்கு தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story