கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் - திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி


கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் - திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி
x

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து கொசஸ்தலை ஆறு உருவாகி நகரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சிவாடா, ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுகின்றனர். பல பகுதியில் இந்த தண்ணீர் குடிநீராகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த ஆற்றில் வரும் தண்ணீரை தடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அணை கட்டி ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றுக்கு வர வேண்டிய பெருவாரியான தண்ணீரை தடுத்து தேக்கியுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர அரசின் தற்போதைய முடிவின்படி கொசஸ்தலை ஆற்றில் 2 இடங்களில் புதிய அணை கட்டுவது என்றும் அதற்காக ரூ.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அணைகள் ஆந்திர மாநிலம் கத்திரிப்பள்ளி என்ற இடத்திலும், மற்றொன்று நகரி மண்டலம் மொக்கலகண்டிகை என்ற இடத்திலும் கட்டப்பட உள்ளன. கத்திரிப்பள்ளி பகுதியில் கட்டப்படும் அணைக்கு ரூ. 92 கோடி ஆந்திர அரசு ஒதுக்கி உள்ளது. இந்த அணை கத்திரிப்பள்ளியில் 540 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. அதேபோல் மொக்கல கண்டிகை என்ற இடத்தில் கட்ட இருக்கும் அணைக்கு ரூ.72.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணை 420 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. அணை கட்டிய பிறகு அந்த பகுதியில் உள்ள 4,428 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்று ஆந்திர மாநில நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல கத்திரிப்பள்ளி என்ற இடத்தில் கட்டும் அணையால் 4,629 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்று ஆந்திர மாநில நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அணைகள் கட்டும் பணிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் டெண்டர்கள் பெறப்படும் என்று நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கட்டப்பட்ட அணை, தற்போது கட்டப்பட உள்ள 2 அணைகள் என்று 3 அணைகளால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் வராமல் தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதனால் ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி பயிர் செய்து வரும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story