மனநல காப்பகத்தில் குணமடைந்த ஆந்திர பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


மனநல காப்பகத்தில் குணமடைந்த ஆந்திர பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x

ஒரு ஆண்டுக்கு முன்பு ஆந்திராவில் மாயமான பெண் திருப்பத்தூர் மனநல காப்பகத்தில் குணமடைந்த நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பிரிந்து பேரக்குழந்தைகளுடன் பரிதவித்த தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

திருப்பத்தூர்

பெண் மாயம்

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராயவரத்தை அடுத்த மச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரெட்டியின் மனைவி கவுரி சூரியம்மாள். இவர் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் சின்னம் லட்சுமி பார்வதி (வயது 39). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவர் நாகரெட்டியுடன் விவாகரத்து ஏற்பட்டது.

இதில் மனநலம் பாதிக்கப்பட்ட சின்னம் லட்சுமி பார்வதி கடந்த ஒரு ஆண்டுக்கு திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிபார்த்தும் அவரை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 3 பேரக்குழந்தைகளையும் கவுரிசூரியம்மாள் வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பெண்ணை அந்த பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை, மருந்துவம் காரணமாக அவர் தனது இருப்பிடமும், குடும்பத்தினர் குறித்த தகவலை சற்று நினைவு கூர்ந்தார். அப்போது அவரது பெயர் சின்னம்லட்சுமி பார்வதி எனவும், ஓராண்டுக்கு முன்பு கிழக்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து மாயமானதும் தெரியவந்தது.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

அதைத்தொடர்ந்து அப்பெண்ணின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரது தாயார் கவுரி சூரியம்மாள் மற்றும் உறவினர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கு வரவழைக்கபட்டனர்.

அங்கு நிர்வாகி ரமேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் சின்னம் லட்சுமி பார்வதியை குடும்பத்தாரிடம் ஒப்படைத்து மருத்துவரின் ஆலோசனையின்படி பார்த்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

தனது மகளை நேரில் கண்ட தாயார் மகிழ்ச்சி பொங்க கூறுகையில், ஒரு ஆண்டுக்கு முன்பு காணாமல் போன மகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தேன். மகளை உயிருடன் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது மகளை இத்தனை காலமாக பாதுகாத்து சிகிச்சையளித்து பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


Next Story