அங்கன்வாடி மையத்துக்கு பூட்டுப் போட்டு பெற்றோர்கள் திடீர் போராட்டம்


அங்கன்வாடி மையத்துக்கு பூட்டுப் போட்டு பெற்றோர்கள் திடீர் போராட்டம்
x

உப்பிலியபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து பரவும் தூசியினால் குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதால் அதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அங்கன்வாடி மையத்துக்கு பெற்றோர்கள் பூட்டுப்போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

நெல் கொள்முதல் நிலையம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது ஏரிக்காடு கிராமம். இங்கு அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அடுத்து அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்திற்கு 12 குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தின் வாசல் பகுதியில் நீண்ட நாட்களாக நெல் மணிகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. அந்த ெநல் குவியலில் இருந்து தூசு பரவுகிறது.

அங்கன்வாடி மையத்துக்கு பூட்டு

இதன் காரணமாக அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு ஏற்படுவதாக பெற்றோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அங்கன்வாடி பகுதியில் நெல் மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென அங்கன்வாடி மையத்துக்கு பூட்டுப்போட்டனர்.

அதிகாரிகள் உறுதி

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல் கொள்முதல் மைய அலுவலர் மோகன்ராஜ், ஊராட்சி தலைவர் நளினி, துணைத்தலைவர் மணி ஆகியோர் விரைந்து வந்து, பூட்டுப்போட்ட பெற்றோரு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் அங்கு நெல் குவித்து வைக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தரப்பில் அங்கன்வாடி ஆசிரியை இளமதி மற்றும் பெற்றோர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த பெற்றோர்கள் அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்துவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story