அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலியை 3 பெண்கள் பறித்து சென்றனர்.

திருச்சி

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஷர்மிளா தேவி(வயது 41). இவர் துறையூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மத்திய பஸ் நிலையம் வருவதற்காக எஸ்.பி.ஐ. காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உள்ளார். பஸ் சிறிது தூரம் வந்த பிறகு அவர் தனது கழுத்தை பார்த்தபோது, 7 பவுன் சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அழுது புலம்பிய அவர், இது பற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பஸ்சில் ஷர்மிளாதேவி பயணம் செய்தபோது அவர் அருகே கருப்பு உடை அணிந்த 3 பெண்கள், அவரை உரசிக்கொண்டு அருகிலேயே நின்று வந்ததாகவும், அவர்கள் அனைவரும் போலீஸ் குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் இறங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஷர்மிளாதேவி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை அந்த 3 பெண்கள் பறித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனா். மேலும் அந்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story