அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
காவேரிப்பாக்கத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி அங்கன் வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரக்குறைவாக...
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 74 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 56 அங்கன்வாடி பணியாளர்கள், 42 உதவியாளர்கள் என மொத்தம் 98 பேர் வேலை செய்துவருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது காவேரிப்பாக்கம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றிவரும் விஜயலட்சுமி என்பவர் அங்கன்வாடி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மாற்றுத்திறனாளி ஊழியர்களை நிற்கவைத்து கேள்வி கேட்பதாகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இதனால் நேற்று குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி காவேரிப்பாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.