அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு ேநற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். சி. ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், 2 வயது குழந்தை முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அரசாணையை அமல்படுத்தும் நிலையில் அங்கன்வாடி மையங்களில் சமைத்து வழங்க அனுமதி அளிக்க வேண்டும், ஏற்கனவே நிலுவையில் உள்ள 13 மினி மைய ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், 1993-ல் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு மேற்பார்வை நிலை-2 பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பதவி உயர்வு வழங்க வேண்டும்
3 ஆண்டுகள் பணி முடித்த மினிமைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பிடித்தம் செய்த ஜி.பி.எப். தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் கலா நன்றி கூறினார்.