அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவதுபோல் மே மாதம் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கக்கோரி நேற்று அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கோரிக்கைகள்

தற்போது தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும், குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளித்திட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்களை கவனிப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்திட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

கரூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்படாமல் உள்ள மினி மைய ஊழியர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 வழங்கிட வேண்டும். அதேபோல் அங்கன்வாடி மையங்களில் மின்கட்டணம் அரசே கட்ட வேண்டும் என்ற முடிவு எடுத்திட வேண்டும்.

காத்திருப்பு போராட்டம்

ஓய்வு பெற்றவர்களுக்கு ஜி.பி.எஸ். தொகையை வழங்கிட வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஜி.பி.எஸ். தொகையில் இருந்து கடன் வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு 1 வருடம் அரசு ஊழியர்களுக்கு போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

மினி மையத்தில் இருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story