அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவி தாமரைச்செல்வி தலைமை தாங்கினார் வட்டார தலைவி ராணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 1,993 அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர்களுக்கு 42 வயதில் பயிற்சி வழங்கப்பட்டு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவி உயர்வை வழங்கிட வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் தீபா நன்றி கூறினார்.