அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம்
பெண் பணியாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.
நூதன போராட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். சமீபத்தில் அங்கன்வாடி பெண் பணியாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டார்ச் லைட் அடித்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு ஐ.சி.டி.எல். ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது அங்கன்வாடி பணியாளரின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், செயல்படாத கைபேசிகளை திரும்ப பெற வேண்டும், அனைத்து பதிவேடுகளையும் அரசே வழங்கிட வேண்டும், அலுவலர்கள் மூலம் ஊழியர்களை மிரட்டுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
துறை ரீதியாக நடவடிக்கை
இது குறித்து சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி பேசிய போது:-
மதுரை மாவட்டம் சிம்மக்கல் தைக்கால்தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாளராக பணிபுரிந்த அம்சவள்ளி என்பவர் கடந்த 9-ந் தேதி அதிகாரிகளின் பணி அழுத்தம் என கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் அங்கன்வாடி பணியாளரின் தற்கொலைக்கு காரணமான திட்டம்-2 குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.