அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்
x

கரூரில் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியா்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

காலமுறை ஊதியம்

வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750-ஐ அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஓய்வூதியர் சங்கம்

இதேேபால் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்ணில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தனபாக்கியம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்ணில் கருப்பு துணியை கட்டி கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story