நீண்ட நேரமாக பஸ் வராததால் ஆத்திரம் - அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி...!


x

கோத்தகிரி அருகே அரசு பஸ்சின் கண்ணாடியை குடிபோதையில் இருந்த நபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையத்தில் குன்னூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய பஸ்சின் முகப்பு கண்ணாடியை மதுபோதையில் உடைத்த நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எனவே கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் பயணிகள் ஏராளமானோர் அங்குள்ள காத்திருப்போர் அறையில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அங்கு தனது குடும்பத்துடன் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குன்னூருக்கு செல்லும் அரசு பஸ்சின் முன்புறமாக சென்று அங்கு கிடந்த கல்லால் பஸ்சின் கண்ணாடியை உடைத்தார்.

பின்னர் தனது கைகளால் மீண்டும், மீண்டும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இவரது இந்த செயலைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

மதுபோதையில் இருந்த நபர் கோத்தகிரி குப்பட்டிகம்பை பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்பது தெரியவந்தது. போதையில் இருந்த வின்சென்ட் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதிக்கு செல்ல நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்துள்ளார்.

பின்னர், பஸ்சின் டிரைவர் மற்றும் நடத்துனர் நீண்ட நேரம் வராததால் ஆத்திரமடைந்த வின்செட் குடிபோதை சாலையில் இருந்த கல்லை எடுத்து அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பொது சொத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story