சாலை பணியை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம்: பொதுமக்களுடன் ஊராட்சி தலைவர் வாக்குவாதம்


சாலை பணியை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம்: பொதுமக்களுடன் ஊராட்சி தலைவர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:47 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தேனி

ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் இருந்து எம்.சுப்புலாபுரம் விலக்கு வரையில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்க ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி ஒப்பந்ததாரரிடம் முறையிட்டனர்.

இதற்கிடையே அமச்சியாபுரம் ஊராட்சி தலைவர் பஞ்சமணி, சாலை பணி நடைபெறும் இடத்திற்கு வந்தார். பின்னர் அவர் சாலை பணிகளை தடுத்தது யார் என்று கேட்டு பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படும் சாலைகளில் குறைகள் இருந்தால் கருத்து கூற கூடாதா? என்று கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story