நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா: சுவாமி-அம்பாள் வீதி உலா
நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்.
மேலும் பக்தி இசை, பரதநாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் இரவில் பாடகி மகதியின் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். டவுன் ரதவீதிகளில் வந்து, மாநகராட்சி சார்பில் தேரோட்டம் அன்று செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.