சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 14 Jun 2023 6:45 PM GMT)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கடலூர்

சிதம்பரம்

ஆனி திருமஞ்சனம்

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினசரி காலை, மாலையில் தங்க, வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

ஆனி திருமஞ்சனம்

விழாவில் 5-வது நாளான வருகிற 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கும், ஆனி திருமஞ்சனம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 28-ந் தேதி(புதன்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கீழ சன்னதி முகப்பு வாசல் பகுதியில் பந்தல் போடும் பணிகள் முடிந்து கோவில் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.


Next Story