அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி


அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த போட்டி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது.

17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடத்தப்பட்டது. போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கி, ஜார்ஜ் ரோடு, பெல் ஓட்டல் சந்திப்பு, ரோச் பூங்கா, பீச் ரோடு ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் வந்து முடிவடைந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த சக்திவேலுக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பிடித்த அஜித்குமாருக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்த மாணிக்கதுரைக்கு ரூ.2 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த ரூபன் டேனியலுக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பிடித்த முத்துசுபினுக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்த வெங்கடேசுக்கு ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த கோகிலாவுக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் படித்த ராதிகாவுக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்த ரம்யாவுக்கு ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த செல்வமணிக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பிடித்த ஷாலினிக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்த பரிமலருக்கு ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும், அனைத்து பிரிவுகளிலும் 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், விளையாட்டு விடுதி மேலாளர் சிவா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story