அண்ணா பண்ணை தினக்கூலி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
அன்னவாசல் அருகே அண்ணா பண்ணையில் வேலை செய்யும் தினக்கூலி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே குடுமியான்மலையில் அரசு அண்ணா பண்ணை உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 150-க்கும் மேற்பட்டோர் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களை கடந்த ஒரு வார காலமாக திடீரென வேளாண்துறை அதிகாரிகள் வயதை காரணம் காட்டி பணி நிறுத்தம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்து அங்கு பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை குடுமியான்மலை அரசு வேளாண்பண்ணையில் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
அப்போது அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இதே அரசுப்பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணி நிறுத்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்வதோடு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும். குடி தண்ணீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.
பரபரப்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா பண்ணை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேளாண்மை அதிகாரிகள், அனைவரும் மீண்டும் வேலைக்கு செல்லலாம் என கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.