அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
நெல்லை மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் இன்று நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 என்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் வருவாய்த்துறை சார்பில் ஒவ்வொரு தாலுகாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சியில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாப்பாக்குடி, மேலக்கல்லூர் ஜே.ஜே.நகர் சமுதாய நலக்கூடத்திலும், மானூர் தாலுகாவில் தடியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பாளையங்கோட்டை தாலுகாவில் ரெட்டியார்பட்டி சமுதாய நலக்கூடத்திலும், அம்பை தாலுகாவில் சேரன்மாதேவி மூலச்சி பொன்மாநகர் சமுதாய நலக்கூடத்திலும், நாங்குநேரி தாலுகாவில் இறைப்புவாரி ஏமன்குளம் சமுதாய நலக்கூடத்திலும், ராதாபுரம் தாலுகாவில் உதயத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், திசையன்விளை தாலுகாவில் கரைசுத்து நவ்வலடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சாலை வசதிகள், போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.