அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மகளிர் தொழில்-முனைவோர் கருத்தரங்கு-கண்காட்சி


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மகளிர் தொழில்-முனைவோர் கருத்தரங்கு-கண்காட்சி
x

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மகளிர் தொழில்-முனைவோர் கருத்தரங்கு-கண்காட்சியை நீதிபதி பி.ஜோதிமணி தொடங்கிவைத்தார்.

மகளிர் தொழில்முனைவோர் கருத்தரங்கு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை நடத்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த கருத்தரங்கை திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இந்த கருத்தரங்கில் 'நியூஸ் 7 தமிழ்' நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியன், நேச்சுரலே லைப் எல்.எல்.பி. நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன், 'ரெப்கோ' வங்கி நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.இசபெல்லா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் குமார் வேம்பு உள்பட தொழில் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சிறந்த தொழில் முனைவோர் விருது ஆட்டோ டிரைவர் மகாலட்சுமிக்கும், சமூக சேவைக்கான விருது சவீதா பல் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் அனிதாவுக்கும், 'வேளாண்மை விருது' இயற்கை விவசாயி அர்ச்சனா ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்டது.

முன்னேற்ற பாதையில்...

கருத்தரங்கில் நீதிபதி ஜோதிமணி பேசியதாவது:-

பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்த ஆபிரகாம் லிங்கன், பிற்காலத்தில் அமெரிக்காவின் அதிபர் ஆனார். பெண் உரிமைக்கான சட்டம் இயற்றினார். அதேபோல காந்தி போன்ற எண்ணற்ற தலைவர்களும் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பெண்கள் போய்கொண்டிருக்கிறார்கள். வேலை தேடி செல்லும் நிலையை தாண்டி, வேலை அளிக்கும் நிலைக்கு பெண்கள் உயர வேண்டும். பெண்கள் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும், இன்னும் வேகமாக செல்லவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'கனவுகளை விட்டுக்கொடுக்க கூடாது'

சம்யுக்தா ஆதித்தன் பேசியதாவது:-

பெண்கள் வலுவாகவும், ஒன்றுபட்டு இருப்பதும் மிகவும் முக்கியம். எப்போதுமே பெரிய கனவுகள் வேண்டும். அந்த கனவுகளை அடைய வேகமாக பணியாற்ற வேண்டும். பெண்களுக்கு தங்களிடம் இருக்கும் பலம் என்ன? என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது ஆகும்.

பெண்களிடம் இருக்கும் பலத்தை விட வலிமையான ஒன்று கிடையாது. குடும்பம், நண்பர்களுக்கு மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினருக்கும் சக்தி வாய்ந்தவளாக பெண் இருக்கிறாள். வெற்றி, மகிழ்ச்சி, வலிமை, அன்பு, புன்னகை ஆகியவை உங்களிடம் இருந்து வெளிப்பட்டு, அனைவரிடமும் நிலவட்டும். அதனால் உங்களுடைய கனவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி

அதனைத்தொடர்ந்து மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் கண்காட்சி நடந்தது. இதில் மகளிர் தொழில் முனைவோரால் தயாரிக்கப்பட்ட மூலிகை நாப்கின்கள், நறுமண குளியல் பவுடர், கைத்தறி ஆடைகள், சுடிதார் மெட்டீரியல்கள், மேக்கப் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மைய இயக்குனர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story