கனல் கண்ணன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்...


கனல் கண்ணன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்...
x

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்து முன்னணி சார்பில் தொடங்கிய இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணத்தின் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய கனல் கண்ணனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'தொடரும் திமுகவின் அராஜக போக்கு! உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?'என கேள்வி எழுப்பி அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது திமுக அரசு. மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாக, கருத்து சுதந்திரத்திலும் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்திவிட்டார்கள்.

சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் திமுக அரசு, கனல் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story