அரசியலுக்கு புதியவர் என்பதை அண்ணாமலை அடிக்கடி நிரூபிக்கிறார்- டி.டி.வி. தினகரன்
அரசியலுக்கு புதியவர் என்பதை அண்ணாமலை அடிக்கடி நிரூபிக்கிறார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி .டி.வி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆளுமை, சாதனைகள் பற்றி எதுவும் தெரியாமல் அறியாமையில் பேசுகிறார். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல முக்கிய பா.ஜ.க தலைவர்கள் ஜெயலலிதாவுடன் அன்புடனும், நட்புடனும் இருந்தவர்கள். 1998-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தென் நாட்டில் காலூன்ற வாய்ப்பு கொடுத்தது ஜெயலலிதா தான்.
இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் உள்பட பல்வேறு நல்ல திட்டங்களை அன்னை தெரசாவே பாராட்டி உள்ளார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் செய்துள்ளார் . அந்த சாதனைகளை பொறுக்க முடியாமல் தான் சிலர் காழ்ப்புணர்ச்சியால் அவர் மீது வழக்கு தொடுத்தனர்.
1996 ஆம் ஆண்டு மட்டும் அவர் மீது 49 வழக்குகள் போட்டனர் . அந்த வழக்கை எல்லாம் அவர் வென்றார். ஜெயலலிதாவின் மரணம் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. அகில இந்திய அளவில் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.