திருப்பத்தூரில் அண்ணாமலை பாதயாத்திரை
திருப்பத்தூரில் அண்ணாமலை பாதயாத்திரை வந்தார்.
பா.ஜனதா. மாநில தலைவர் அண்ணாமலை, ''என் மண், என் மக்கள்'' எனும் முழக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நேற்று மாலை அவர் பாதயாத்திரை வந்தார். முன்னதாக தென்மாபட்டு பகுதியில் பா.ஜ.க.வினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தென்மாபட்டு வழியாக சென்று பஸ் நிலையம் எதிரே உள்ள மருது பாண்டியர்களின் நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாமலை பேசுகையில்,
தி.மு.க. ஆட்சி வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நம்பர் ஒன் மாநிலமாக மது குடிப்பதிலும், கடனிலும்தான் தமிழகம் மாறியுள்ளது. 22 சதவீதம் டாஸ்மாக்கின் வருமானம் உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் தற்போது உலகில் 5-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. 2028-ல் 3-வது உலக பொருளாதார நாடாக இந்தியா மாறும்.
பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்குகிறார். 30 சதவீதம் கமிஷன் கேட்பதால் எந்த ஒரு தனியார் நிறுவனமும் தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க முன் வருவதில்லை. 22 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுக்காமல் மக்களுக்காக வேலை பார்த்து கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் தலைசிறந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஊருக்குதான் உபதேசம் என்பதை காட்டுகிறது. இவ்வாறு பேசினார்.
அப்போது முன்னாள் மாநில தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.