தி.மு.க.வுடன் கூட்டணி சேர அண்ணாமலை திட்டம்:"எங்கள் தோளில் இருந்துகொண்டு எங்கள் காதையே கடிப்பதா?"-செல்லூர் ராஜூ கண்டனம்


தி.மு.க.வுடன் கூட்டணி சேர அண்ணாமலை திட்டம்:எங்கள் தோளில் இருந்துகொண்டு எங்கள் காதையே கடிப்பதா?-செல்லூர் ராஜூ கண்டனம்
x

எங்கள் தோளில் இருந்துகொண்டு எங்கள் காதையே கடிப்பதா?் என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்

மதுரை


எங்கள் தோளில் இருந்துகொண்டு எங்கள் காதையே கடிப்பதா?் என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பேட்டி

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தேவையில்லாததை எல்லாம் பேசுகிறார். அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. நாங்கள் மோடி, அமித்ஷா, நட்டா ஆகிய பா.ஜனதா தலைவர்களை பற்றி எல்லாம் தவறாக பேசவில்லை. ஆனால் அண்ணாமலை எங்களது தலைவர்களை எல்லாம் தவறாக பேசுகிறார்.

மறைந்த தலைவர்களை இகழ்ந்து பேசுவது தவறு. இந்த அடிப்படை விஷயம் கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. முதலில் ஜெயலலிதா பற்றி பேசினார். அதற்கு மன்னிப்பு கேட்டார். இப்போது அண்ணாவை பற்றி பேசியுள்ளார். மதுரையில் அண்ணா மன்னிப்பு கேட்டு ஓடிவிட்டார் என்று கூறுகிறார். இப்போது இது போன்ற பேச்சுக்கள் எல்லாம் தேவையா?

கடந்த கால சம்பவங்களை ஏன் இப்போது கிளறிக்கொண்டு வரலாற்றை மாற்றி பேசுகிறார். எங்கள் கட்சி பெயரில் அண்ணா இருக்கிறார். கொடியில் அண்ணா இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரை பற்றி தவறாக பேசலாமா?.

தூக்கி எறிவோம்

நாங்கள் மத்தியில் மோடி வர வேண்டும் என்று நினைக்கிறோம். அதே போல் அவர்கள் மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி வர வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில்தான் நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்கிறார்.

அதனையெல்லாம் கேட்டு நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமா?. எங்கள் தோளில் அமர வைத்து இருக்கிறோம். ஆனால், எங்கள் காதையே கடித்தால் கீழே தூக்கி போட்டுவிட மாட்டோமா? பா.ஜனதா, எங்களது காதை கடித்தால் நாங்கள் தூக்கி கீழே எறிந்து விடுவோம்.

தன்மானம்தான் முக்கியம்

எதற்கெடுத்தாலும் நான் ஐ.பி.எஸ். படித்தவன் என்று அண்ணாமலை கூறுகிறார். படித்தவன் பாட்டை கெடுத்தான், எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்பது போல, அண்ணாமலை பா.ஜனதா கட்சியை கெடுத்து கொண்டு இருக்கிறார். அண்ணாமலையின் செயல்பாடுகள், அந்த கட்சியை வளர்ப்பது போல் தெரியவில்லை. அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கிறார். அண்ணாமலை தனக்கு வரும் கூட்டத்தை கண்டு மிதப்பில் இருக்கிறார். இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக வருமா?. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, கருணாநிதியின் பொதுக்கூட்டங்களில் அதிக கூட்டம் கூடும். அப்போது கருணாநிதியே, இவ்வளவு கூட்டம் எனக்கு கூடுகிறீர்கள். ஆனால் ஓட்டை எல்லாம் எம்.ஜி.ஆருக்கு போட்டு விடுகிறீர்கள் என்று கூறுவார். அண்ணாமலை அரசியல் களத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவர் பேசுவதை எல்லாம் மத்திய தலைமை கண்டித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மவுனமாக இருப்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசுகிறார். நாங்கள் பதிலுக்கு பா.ஜனதாவை ஒழிக்க வேண்டும் என்றால் சும்மா இருப்பாரா?. எங்களுக்கு வெற்றியை விட தன்மானம் தான் முக்கியம். நாங்கள் இழி பிறவி அல்ல.

ரகசிய ஒப்பந்தம்

நாங்கள் கொள்கைவாதி. கொள்கைதான் வேஷ்டி. கூட்டணி என்பது துண்டு.

எப்போது வேண்டுமானாலும் துண்டை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் வேஷ்டி அப்படி அல்ல.. அண்ணாமலை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். நாங்கள் அ.தி.மு.க.வை விட்டு வெளியே வந்து விடுகிறோம். நீங்களும், நாங்களும் இணைந்து கொள்ளலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறார்கள். எங்கள் தலைவி ஜெயலலிதா சொன்னது போல நாங்கள் எப்போதும் மக்களுடன்தான் கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story