திருச்செந்தூரில் ஏப்.14-ம் தேதி நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை...!
கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடலூர்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில மேலிட பார்வையாளர் ரவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏப்.14-ம் தேதி திருச்செந்தூரில் நடைபயணத்தை தொடங்குகிறார். ராமர் பாலம் பாதிக்காத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.