அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ஜி.மனோகரன், ரவி, எஸ்.மனோகரன், பழனிவேல் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, பா.ம.க. மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற 30-ந் தேதி முதல் ஆசிரியர், ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.