'நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில், காவிரி டெல்டா பகுதிகளை நீக்குங்கள்' மத்திய மந்திரியிடம் அண்ணாமலை வலியுறுத்தல்
நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை நீக்கவேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தருணத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
'காவிரி டெல்டா பகுதிகளை நீக்குங்கள்'
தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது. சுரங்க ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள, சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 பிளாக்குகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் வருகின்றன.
சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 பிளாக்குகளிலும் நிலக்கரி இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளிக்கொணரப்பட்டது.
இதனால், நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படும்; டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சுரங்க ஏலம் விடப்படுகிற பட்டியலில் இருந்து சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 பிளாக்குகளையும் நீக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உறுதி
தமிழக பா.ஜ.க. சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்.
இந்த தகவலை அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.