அண்ணன்மார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


அண்ணன்மார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 1 July 2023 1:00 AM IST (Updated: 1 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே அமரபூண்டியில் அண்ணன்மார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

அண்ணன்மார் சுவாமி கோவில்

பழனி அருகே அமரபூண்டி கிராமத்தில் பவளகுலம் மற்றும் முழுக்காதன் குல பங்காளிகள் வழிபடும் குலதெய்வமான பொன்னர்-சங்கர் என்ற அண்ணன்மார் சுவாமி மற்றும் ஸ்ரீநல்லதங்கம் கோவில், தற்போது அமரபூண்டியில் ஆயக்குடி செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 28-ந் தேதி விநாயகர் பூஜை, லட்சுமிபூஜை, கணபதி யாகம், வாஸ்துசாந்தி, கோபூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் யாகம் தொடங்கியது. அதை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் காப்புக்கட்டுதலுடன் முதற்கால யாகம் தொடங்கியது. பின்னர் 29-ந்தேதி 2-ம் கால யாகமும், மாலையில் 3-ம்கால யாக பூஜையும் நடைபெற்றது.

யாகசாலை பூஜை

இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு யாகசாலையில் சிறப்பு பிரார்த்தனை, 4-ம்கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை, பூர்ணாகுதியும் நடைபெற்றது. அதன்பிறகு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு விநாயகர் சன்னதி, அண்ணன்மார் சுவாமிகள், ஸ்ரீ நல்லதங்கம் சன்னதி, கருப்பணசாமி சன்னதி, சப்தகன்னி சன்னதிகளின் விமானங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது தீபாராதனை நடைபெற்றது. மேலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த விழாவில் பழனி, அமரபூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகள்

கும்பாபிஷேக விழாவையொட்டி வேலராசி கலைக்குழுவின் சார்பில் வள்ளி கும்மி ஆட்டம், தேவகோட்டை மகாராஜன் குழுவின் நகைச்சுவை பாட்டு மன்றம், டி.வி. புகழ் மஞ்சுநாதனின் நல்லதங்காள் படுகள பாடல்கள் மூலம் அண்ணன்மார் சுவாமிகளை படுகளத்தில் எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை பவளகுல பங்காளிகள், முழுக்காதன் குல பங்காளிகள் அப்பாத்துரை, நடராஜன், சின்னத்துரை, எஸ்.வி.எப்.ராமு பிரதர்ஸ், ராமசாமி, வெங்கடாசலம், சந்திரகுமார், சுந்தர்ராஜ், செல்லமுத்து, அய்யப்பன், செல்வராஜூ, செல்லமுத்து, தங்கராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story