அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி


அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 4 Oct 2023 8:00 PM GMT (Updated: 4 Oct 2023 8:01 PM GMT)

தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

தேனி

மாரத்தான் போட்டி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விளையாட்டுத்துறையின் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. இந்த போட்டிகள் தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நாளை மறுநாள் காலை 6 மணியளவில் தொடங்குகிறது.

இதில், 17 வயது முதல் 25 வயது வரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 8 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்.

மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் அட்டை, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும்.

பரிசுத்தொகை

இப்போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்கள் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1,000 ஆறுதல் பரிசு வழங்கப்படும். எனவே, போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் கொண்டு வர வேண்டும்.

போட்டியில் பங்கேற்பவர்கள் உடற்தகுதி குறித்த சுயஉறுதி மொழி படிவம் பூர்த்தி செய்யவும், வயதுச்சான்று சரிபார்ப்பதற்கும் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் சென்று பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story