சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
சேலம்
அ.தி.மு.க.வின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கொண்டலாம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசும் போது, சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதல்-அமைச்சர் செய்ய வேண்டிய திட்டங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்து செய்து வருகிறார். தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை. அதனால் தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியே வர உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர். தி.மு.க.வை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் அதனை சட்டப்படி சந்திப்போம். மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களுக்கு சுமையை திணிக்கக்கூடாது என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜூ, ஆர்.ஆர்.சேகரன், சக்திவேல், ரவிச்சந்திரன், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், வினாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.