அன்னூர், சிறுமுகை, பவானிசாகர் தொழிற்பேட்டை திட்டங்களை ரத்து செய்யக்கோரி அறவழி போராட்டம்; பவானி ஆறு பாதுகாப்பு இயக்கம் முடிவு
அன்னூர், சிறுமுகை, பவானிசாகர் தொழிற்பேட்டை திட்டங்களை ரத்து செய்யக்கோரி அறவழி போராட்டங்கள் நடத்துவது என பவானி ஆறு பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னிமலை
அன்னூர், சிறுமுகை, பவானிசாகர் தொழிற்பேட்டை திட்டங்களை ரத்து செய்யக்கோரி அறவழி போராட்டங்கள் நடத்துவது என பவானி ஆறு பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தொழிற்பேட்டை
தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் சிறுமுகை-அன்னூர் பகுதியில் 3 ஆயிரத்து 800 ஏக்கர் மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் 1,084 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டைகளை அமைக்க தமிழக அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஆனால் இந்த திட்டங்களை கொண்டு வந்தால் சுமார் 18 லட்சம் மக்களின் குடிநீர் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன், அவினாசி - அத்திக்கடவு பாசன திட்டங்கள் என 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வரும் பவானி ஆற்று நீர் முற்றிலும் மாசுபட்டு நொய்யல் ஆற்றை போல மாறிவிடும் என விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் மற்றும் பவானி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமை தாங்கினார். கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்கள்.
அறவழி போராட்டங்கள்
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
'திருப்பூர் சாயக்கழிவுகளால் ஏற்கனவே நொய்யல் ஆறு முற்றிலும் மாசுபட்டு அந்த தண்ணீரை பயன்படுத்திய ஏராளமான பொதுமக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுபோல் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பவானி ஆற்றை பாதுகாக்கும் வகையில் தொழிற்பேட்டை திட்டங்களை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி முதலில் ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுப்பது. ெதாடர்ந்து வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து திட்டத்தின் பாதிப்புகளை எடுத்து கூறி ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அறவழி போராட்டங்களை தொடங்குவது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஈசன் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர்), மே.கு.பொடாரன் (தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்கம்), விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.