டாஸ்மாக் கடையை மூடக்கோரி மீண்டும் காத்திருப்பு போராட்டம்
சின்னமனூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மீண்டும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை போலீசார் கைது செய்தனர்.
காத்திருப்பு போராட்டம்
சின்னமனூரில் எள்ளுக்கட்டை ரோடு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்த கடையை நிரந்தரமாக மூடக் கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது அந்த கடையை வேறு இடத்தில் மாற்றுவதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று சின்னமனூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வர்த்தக சங்கத்தினர், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. கைது
பின்னர் கடை முன்பு நின்று அவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சின்னமனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
இதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் கட்சியினர் சின்னமனூர் பைபாஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
மண்டபத்தில் அடைக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட கைது செய்யப்பட்டவர்களை இரவு 7 மணிக்கு போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ, உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இன்னும் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது. அதற்குள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து தீர்வு காணும்படி அதிகாரிகள் கூறினா். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக நேற்று டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.