கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விக்கிரமசிங்கபுரம் அருகே கொலை வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளத்தை சேர்ந்தவர் சிவராமன் (வயது 25). இவர் இடப்பிரச்சினை காரணமாக ஆலடியூரில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியன் (36), வைத்திலிங்கம் என்ற ராசு (47), உலகநாதன் என்ற சங்கர் (28), செல்வராஜ் என்ற ராசு (33), வெங்கடசுப்பிரமணியன் என்ற வெங்கடேஷ் (37), முருகன் என்ற கீர்த்தி (27), கோடாரங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து (54) ஆகிய 7 பேரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் சுடலைமுத்துவை தவிர மற்ற 6 பேரும் கடந்த மே மாதம் 22-ந்தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சுடலைமுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் கவனத்துக்கு வந்ததால், சுடலைமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரைப்படி, கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், சுடலைமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தனர்.